internet

img

முத்தமிழ் அறிஞர் கலைஞர் - ஆர்.பாலகிருஷ்ணன்

முத்தமிழ் அறிஞர் கலைஞர்: நிகழ்வு 1
1976 ஆம் ஆண்டு இறுதி. நாள் சரியாக நினைவில்லை.
நாட்டில் 1975 லிருந்தே நெருக்கடி நிலை அமலில் இருந்தாலும் அதன் கடுமை அப்போது கலைஞர் தலைமையிலான தமிழக அரசு 1976 ஜனவரி 31 அன்று கலைக்கப்படும் வரை தெரியவில்லை.
ஆட்சிக்கலைப்பிற்கு பிறகு நிலைமை வெகுவாக மாறிவிட்டது. அரசியல் சார்ந்த காரணங்களின்‌ பின்னணியில் தியாகராசர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட நான் மதுரை யாதவர் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது தமிழ்த்துறை தலைவராக (நினைவில் வாழும்) பேராசிரியர் தமிழ்க்குடிமகன் இருந்தார்.
முத்தமிழ் மன்றத்தின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தமிழ்மன்ற விழாவிற்கு கலைஞரை அழைக்கலாம் என்று பேராசிரியர் தமிழ்க்குடிமகனும் நானும் விரும்பினோம். அதன்படி எனது வகுப்புத் தோழர் ஒருவருடன் சென்னை சென்றேன். கோபாலபுரத்திலுள்ள கலைஞரின் வீடு. அமைதியாக இருந்தது. மாடியிலுள்ள அறையில் கலைஞரை சந்திக்க அனுமதி கிடைத்தது.
மதுரை யாதவர் கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டோம்.
" என்ன‌ விஷயம்" என்று கேட்டார்.

"நான் முத்தமிழ் மன்றத்தின் தலைவர்
எங்களது விழாவில் நீங்கள் சொற்பொழிவாற்ற வேண்டும்" என்றேன்.
"நெருக்கடி நிலை அமலில் இருக்கிறது. பத்திரிகை செய்திகள் தணிக்கை செய்யப்படுகிறது. என்னை அழைத்தால் உங்கள் கல்லூரி சிரமத்திற்கு உள்ளாகும்" என்றார்.
அது மட்டும் அல்ல. "நீங்கள் வளரும் இளைஞர். உங்கள் வேலைவாய்ப்பு கூட பாதிக்கப்படும். அழைப்பிற்கு நன்றி. ஆனால் நான் வர இயலாது. வரவும் கூடாது" என்றார்.
நான் அத்தோடு நிறுத்தாமல் "நான் காமராஜரின் தொண்டன். ஆனால் இந்தச் சூழ்நிலையில் நீங்கள் தான் வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம்" என்றேன். அவர் புன்னகைத்தார்.
மீண்டும் ஒருமுறை "நான் வருவது உங்கள் அனைவரையும் சிரமத்திற்கு உள்ளாக்கும். வேண்டாம்" என்று சொல்லி‌ விடை கொடுத்தார். "உங்கள் ஆசிரியர் தமிழ்க்குடிமகனை‌ கேட்டதாக ‌சொல்லுங்கள்" என்றார். 
நான் அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர்: நிகழ்வு -2
எனது பேராசிரியர் தமிழ்க்குடிமகன் 1989 தேர்தலில் வென்று சட்டப்பேரவைத் தலைவராகிவிட்டார். தேர்தலில் போட்டியிடுவது முடிவானதுமே என்னிடம் தெரிவித்தார். அப்போது ஒடிசாவில் கோராபுட் என்ற இடத்தில் பணியாற்றினேன்.
அதைத்தொடர்ந்து சென்னைக்கு வந்த போது சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்க அழைத்துச்சென்றார்.
சட்டமன்றத்தில் தமிழ்க்கல்வி பற்றிய விவாதத்தின் போது சட்டமன்றத்தில் எனது பெயரை குறிப்பிட்டு பேசியதாக கூறிய அவர் ஒருமுறை என்னை முதல்வர் கலைஞரிடம் அழைத்துச் சென்றார்.
"வணக்கம்" தெரிவித்தேன்.
*நலமா" என்றவர் எனது பணி குறித்து விசாரித்தார். "தமிழ்க்குடிமகன் அடிக்கடி உங்கள் பெயரை கூட்டங்களில் குறிப்பிடுவார்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அப்போது "நீங்கள் திருவாரூர் மாப்பிள்ளை ஆயிற்றே" என்றதும் வியப்பில் உறைந்தேன்.
எனது திருமணம் தமிழ்க்குடிமகன் தலைமையில் திருவாரூரில் நடந்தது. இதை பேராசிரியர் தமிழ்க்குடிமகன் கலைஞரிடம் எப்போதோ சொல்லியிருக்கிறார். அதை அவர் நினைவில் வைத்திருந்தார் என்பது வியப்பாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவருடன் இருந்த ஐந்து நிமிடங்களில் " திருவாரூர் மாப்பிள்ளை" என்பதை இரண்டு முறை அங்கு வந்த தலைவர்களிடம் சொல்லிவிட்டார் முதல்வர் கலைஞர்..
இதையே பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை ஒரு பொது நிகழ்வில் காலஞ்சென்ற ஜி.கே மூப்பனாரிடம் சொல்வார் என்பது அப்போது எனக்கு தெரியாது.
மீள் பதிவாக
முத்தமிழ் அறிஞர் கலைஞர்: நிகழ்வு - 3
1997 ஆம் ஆண்டு என்பதாக நினைவு. (எனது நினைவாற்றல் கொஞ்சம் குத்துமதிப்பானது தான்!)
திரைப்பட இயக்குனர் திரு. பாரதிராஜா தான் அமெரிக்கா சென்று வந்த அனுபவம் பற்றி ஒரு நூலை வெளியிட்டார். அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் திரு ஜி.கே. மூப்பனார் அவர்களும் மற்றும் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விழா நடைபெற்றது.
அப்போது நான் சென்னையில் நான்கு ஆண்டுகள் மைய அரசுப் பணியில் இருந்தேன்.
அந்த விழாவில் திரு. பாரதிராஜாவின் விருப்பப்படி நானும் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினேன்.
என்னுடைய உரையை‌ முடித்து மேடையில் ‌நான் அமர்ந்து இருந்த இருக்கைக்கு செல்லும் போது முதல்வர் கலைஞருக்கும் ஜி.கே.மூப்பனாருக்கும் வணக்கம் தெரிவித்தேன். 
மூப்பனார் அவர்களுடன் எனக்கு அறிமுகம் உண்டு. 
அவர் அருகில் இருந்த முதல்வரிடம் என்னை அறிமுகம் செய்தார்.
"பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஒடிசா கேடர் இப்போது சென்னையில் வேலை பார்க்கிறார்" என்று சொல்லி முடிக்கும் முன்பே கலைஞர் புன்முறுவலுடன் "இவர் தமிழ்க்குடிமகனின்‌ மாணவர். தமிழ் இலக்கியம் படித்தவர். திருவாரூர் மாப்பிள்ளை" என்றார்.
1989 இல் "திருவாரூர் மாப்பிள்ளை" என்று என்னை‌க் குறிப்பிட்டவர் இப்போதும் அதை நினைவில் வைத்திருக்கிறாரே என்ற மகிழ்ச்சியுடனும் வியப்புடனும் எனது இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போது பாரதிராஜா பேசிக்கொண்டு இருந்தார். திடீரென்று முதல்வர் கலைஞர் தனது பின்னால் அமர்ந்திருந்த திரு. சண்முகநாதனை அழைத்து ஏதோ சொன்னார். அதன்பிறகு சண்முகநாதன் வேறு ஒருவரிடம் ஏதோ சொல்லி அனுப்பினார். சுமார் பதினைந்து இருபது நிமிடங்களில் திரும்பிவந்த அவர் சண்முகநாதனிடம் ஏதோ ஒரு குறிப்பைக் கொடுத்தார். என்னவென்று தெரியவில்லை.
இறுதியில் முதல்வர் கலைஞர் உரையாற்றும் போது தான் விஷயம் என்னவென்று தெரிந்தது. கலைஞர் 1971 நவம்பரில் அமெரிக்கா சென்ற போது அங்கே எழுதிய கவிதை உள்பட சில குறிப்புகளை தனது சொற்பொழிவின் போது அவர் வாசித்துக்காட்டினார்.
பாரதிராஜா பேசும் போது, தான் எப்போதோ அமெரிக்காவில் எழுதியதை நினைவுகூர்ந்து பதினைந்து நிமிடங்களில் அதை மேடைக்கு வரவழைத்து தனது உரையில் பயன்படுத்திய ஆளுமையை நேரில் பார்த்து வியப்படைந்தேன்.
இந்த நிகழ்ச்சி பற்றி இன்று காலை (10/08/2018) எழுதும் போது 'கலைஞர் அன்று மேடையில் இருந்தபடியே ஆளனுப்பி வரவழைத்து என்ன வாசித்தார்' என்று யோசித்தேன். தனது உரையின் போது ஏதோ கவிதை வாசித்துக்காட்டினார் என்பது மட்டும் நினைவில் இருந்தது. யாரிடம் கேட்டால் தெரியும்? தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நண்பர் முனைவர் மா. ராஜேந்திரன் தான் நினைவுக்கு வந்தார். தொலைபேசியில் பேசினேன். அடுத்த சில மணி நேரங்களில் அந்தக் கவிதையும் கலைஞரின் அமெரிக்க பயணம் பற்றிய குறிப்புகளும் வாட்ஸ்அப்பில் வந்து சேர்ந்தது.
அந்தக் கவிதை ஆர்லண்டோ நகரத்தில் ஓர் அழகிய ஏரியின் நடுவில் அமைந்த மிகப்பெரிய நீரூற்று பற்றியது. இது கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி" நூலில் இடம் பெறுகிறது.
அந்தத் கவிதையிலிருந்து சில வரிகள்.
" பசும்புல் தரைமீது பால் நிறத்தில்
பனிக்கட்டி உருள்வது போல் ஓர் காட்சி- அதைப்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே 
"படக்" என மாறிவிடும் மற்றோர் காட்சி.
இப்படித்தான் இங்குள்ள 'அப்போலோ' கிளம்பிற்றென்று
இருள் கிழித்து வானேறும் நீரின் கரங்கள்
பொற்கொல்லர் பட்டறையில் 
பொன்பரப்பும் மஞ்சள் ஒளி 
விற்பட்ட அம்பு போல விர்ரென்று எழுந்து பாயும்." 
...............................
மார்கழித் திருநாளில் நம்மூரில் மங்கையர்கள் திருவாயில் பாவிரித்துத் தத்தம் தெருவாயில் பறங்கிப்
பூ விரித்து வைக்கின்ற கோலம் போல்"
என்று அடுக்கடுக்கான
காட்சிப்படிமங்களாய் விரிகிறது கவிதை.
தமிழக முதல்வர், அமெரிக்கா, ஆர்லண்டோ, ஏரி, நீரூற்று,அப்போலோ, பொற்கொல்லர், மார்கழி மாதத்து பனிக்காலை வாசலில் தமிழ்க்கோலம்...
என்று யோசித்துப் பார்த்தேன்...
வியப்பாக இருக்கிறது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்: நிகழ்வு -4

1994 முதல்1998 வரை சென்னையில் நான்கு ஆண்டுகள் மைய அரசுப்பணியில் இருந்தேன்.‌ அப்போது எனது எனது இனிய நண்பர் திரு. தமன் பிரகாஷ் ( கணையாழி பதிப்பாளர்) மூலமாக பெரியவர் ஷோபா காந்த தாஸ் அவர்களின் ‌அறிமுகம் கிடைத்தது.
அவர் பிறப்பால் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். 1945 இல் சென்னையில் குடியேறியவர். சிறந்த காந்தியவாதி. தமிழ்நாட்டில் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்‌ போன்ற திராவிட கட்சித்தலைவர்கள் அனைவரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மறைந்த ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு மிக நெருக்கமானவர். நெருக்கடி நிலையின் போது வட மாநில தலைவர்களுக்கு தமிழகம் புகலிடமாக அமைந்ததில் ( ஆட்சி கலைப்பு நிகழும் வரை) இவருக்கும் பங்கு உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வட சென்னையில் மூலிகை மருந்துகள் மொத்த வியாபாரமும் செய்துவந்தார். பல பொதுநலச் செயல்களையும் முன்னெடுத்து வந்தார். மிக எளிமையான வாழ்க்கை முறை.
மிகக்குறுகிய காலத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் எனக்கு நெருக்கமாகிவிட்டனர். என்மீது மிகவும் அன்பும்‌ அக்கறையும் கொண்டிருந்தார்.
"ஓய்வு பெற்றதும் எங்கே " செட்டில்" ஆவீர்கள்" என்று ஒரு முறை கேட்டார். "சென்னையில் தான்" என்று சொன்னேன். "வீடு இருக்கிறதா" என்று கேட்டார். "இல்லை" என்றேன். "மனை இருக்கிறதா" என்று கேட்டார். அதுவும் இல்லை என்று சொன்னேன். ஏதோ யோசித்தவர் "கலைஞரிடம் சொல்லி அரசாங்க விலையில் ஒரு வீட்டு மனை வாங்கித்தந்துவிடுகிறேன்" என்று அக்கறையுடன் சொன்னார். "ஏதோ காபி டீ வாங்கிக் கொடுப்பது போல சொல்கிறாரே" என்று நினைத்துக்கொண்டேன்.
தமிழக அரசுக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதி அதை அவரிடம் கொடுத்து விடுமாறும் மீதியை தான் பார்த்துக் கொள்வதாகவும் சொன்னார். இருந்தாலும் நான் தயங்கினேன். "இது சம்பந்தமாக நீங்கள் யாரையும் நேரில் பார்க்கத் தேவையில்லை" என்றும் என்னிடம் தெளிவுபடுத்தினார். நான் "சரி" என்று தலையாட்டிவைத்தேனே தவிர அது தொடர்பாக மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
ஷோபா காந்த தாஸ் இரண்டு மூன்று முறை என்னிடம் நினைவுபடுத்தினார். எனது "சைடில்" எந்த வித முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையில் எனது மைய அரசுப் பணிக்காலம் முடிந்து ஒடிசா மாநில அரசில் மயூர்பன்ஜ் என்ற மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக நியமன ஆணையும் வந்துவிட்டது. நாங்கள் வீட்டு சாமான்கள் அனைத்தையும் லாரியில் ஒடிசா அனுப்ப ‌"பேக்கிங்" செய்து "லேபிள்"'ஒட்டிக்கொண்டிருந்தோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. திடீரென்று ஹாடோஸ் நகரில் இருந்த எங்களது குடியிருப்பு வாசலில் ஓர் ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஷோபா காந்த தாஸ் இறங்கினார். "கடிதம் கொடுக்காமலேயே ஒடிசா கிளம்பி விட்டீர்களா" என்றார். " சாரி சார். ஒடிசா போனதும் மறக்காமல் உங்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கிறேன்" என்றேன். "
அந்த வேலையே கிடையாது. கையோடு எழுதி வாங்கிக்கொண்டு போகத்தான் ஆட்டோ ரிக்சாவை அரைநாள் வாடகை பேசி வந்திருப்பதாக கூறி பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார்.
திரு. சண்முகநாதனிடம் கலைஞரை பார்க்க ' அப்பாயிண்ட்மெண்ட்' கேட்டிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார்கள் என்றார்.
இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை கணிப்பொறியில் எப்படி தட்டச்சு செய்வது? ஜெராக்ஸ் டி.டி.பி கடைகள் எல்லாம் விடுமுறை ஆச்சே என்றேன். ஆயிரம்விளக்கு பகுதியில் ( அப்படித்தான் நினைவு) அடையாறு ஸ்டூடன்டஸ் ஜெராக்ஸ் கிளை ஞாயிற்றுக்கிழமை திறந்திருப்பதாக சொன்னார்.‌ உடனே கடிதம் ஒன்றை தமிழில் எழுதி எனது தம்பி அழகர்சாமியை, ஷோபா தாஸ் வந்த ஆட்டோவில் அனுப்பி கணிப்பொறியில் தட்டச்சு செய்து பிழை திருத்தி கடைசியில் அவர் கையில் கடிதத்தை கொடுத்தேன்.‌ அந்த காந்தியவாதி அதை வாங்கிச் சென்றார். நான் அவரை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
வீட்டு பொருள்கள் எல்லாம் பேக்கிங் ஆகிவிட்டதால் நண்பர்கள் வீட்டிலும் உணவுவிடுதிகளிலும் தான் எங்களுக்கு சாப்பாடு.
என்னவோ தெரியவில்லை முதல்வர் வீட்டில் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை என்று இரண்டு நாட்கள் அவர் தொடர்ந்து என்னிடம் சொன்னதும் "சார் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். அவசரம் ஏதுமில்லை* என்றேன்.
திடீரென்று மூன்றாவது நாள் அவர் கலைஞரை பார்த்து பேசிவிட்டதாக மகிழ்ச்சியுடன் சொன்னார்.மறுநாள் நான் ஒடிசாவிற்கு கிளம்பவேண்டும். குடும்பத்துடன் நாங்களே வந்து நேரில் சொல்லிக்கொள்ளவருகிறோம் என்று சொல்லி பூக்கடை காவல்நிலைய பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றோம்.
"என்னா பாலாஜி ( அவர் என்னை அப்படிதான் கூப்பிடுவார்) கலைஞருக்கு உங்களைப் பற்றி‌ விவரமாக தெரிந்திருக்கிறதே நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லையே" என்றார். "சார் அவரை எல்லோருக்கும் தெரியும். ஆனால் என்னை அவர் நினைவில் வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கமுடியுமா. அதிலும் நீங்கள் என்மீது இவ்வளவு அக்கறை காட்டும் போது அவருக்கு ஒருவேளை என்னை நினைவிருக்கலாம் என்று கூட உங்களிடம் சொல்ல தோன்றவில்லை" என்று சொல்லி விட்டு " என்ன நடந்தது" என்று கேட்டேன்.
"என்ன விஷயம் இவ்வளவு அவசரமாக பார்க்க வந்திருக்கிறீர்கள்" கலைஞர் அன்று கேட்டதும் எனக்கு தெரிந்த ஓர் ஐ‌.‌ஏ.எஸ் அதிகாரி என்று சொல்லி உங்கள் பெயரைச் சொன்னேன். ஒடிசா கேடர் என்று சொன்னதுமே உங்களை பற்றி அவரே விவரம் சொன்னார். படித்த படிப்பு சொந்த ஊர் திருமணம் செய்த ஊர் நீங்கள் ஆராய்ச்சி செய்யும் விவரம் கூட‌ தெரிந்திருக்கிறது". கடிதத்தை வாங்கிக்கொண்டார். மிகவும் "பாசிட்டிவாக" பேசினார். தமிழ்க்கல்வியின் மீது அவர் காட்டிய நம்பிக்கைக்காகவே இதை நான் செய்வேன்" என்று கலைஞர் சொன்னதாக ஷோபா காந்த தாஸ் தனது "மழலைத் தமிழில்" "ஆங்கிலமும் கலந்து என்னிடம் சொன்னார். கலைஞரிடம் இதுவரை தனக்காக எதுவும் கேட்டதில்லை." என்றார். நாங்கள் அவரது அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி கூறி விடைபெற்றோம்.
இருந்தாலும் உண்மையில் நான் ஓர் அளவுக்கு மேல் அதை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. 
ஒடிசாவிற்கு சென்ற நாள் முதல் தலைக்கு மேல் வேலை. அது தான் ஒடிசாவிலேயே பெரிய மாவட்டம்.
ஏகப்பட்ட பிரச்சினைகள். நான் இந்த விஷயத்தை அப்படியே மறந்துவிட்டேன்.
பலமாதங்களுக்குப் பிறகு ஒரு நாளிரவு. கலெக்டர் பங்களாவிலேயே இருக்கிற முகாம் அலுவலக அறையில் அன்றைக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை மேலோட்டமாக பார்த்து சுருக்கக் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன்.
அப்போது " தமிழக அரசு - அனுப்புகை எழுத்தர் " என்று அச்சடித்த உறையில் ஒரு கடிதம். வீட்டுவசதி வாரியம் மூலமாக அரசு விலையில் எனக்கு ஒரு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் தானே செட்டில் ஆகப்போகிறேன் என்று சொல்லி ஒடிசா அரசு கொடுத்த இடத்தை வாங்காமல் கடிதம் எழுதி "சரண்டர்" செய்திருந்தேன் சில ஆண்டுகளுக்கு முன்பு. எனவே இந்த மடல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
மிகவும் மகிழ்ச்சியுடன் ஷோபா காந்த தாஸிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தேன்.
சென்னை வந்து அது தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டேன். மாதத் தவணை முறையில் பணம் கட்டி கடைசியாக 2004 இல் நான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த அன்று தான் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது.‌
அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
கோபாலபுரம் வீட்டில் அவரை சந்தித்த போது நடந்த உரையாடல் சுவையானது. மறக்க முடியாதது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர்: நிகழ்வு ‌- 5
2004 ஆம் ஆண்டு. நான் ஒடிசா மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தேன். அப்போது தான் பொதுத்தேர்தல் நடந்து முடிந்திருந்தது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மாதத்தவணை முழுவதையும் ஆறு ஆண்டுகளில் கட்டிமுடித்து விட்டதால் தமிழகஅரசு வழங்கிய வீட்டுமனையை எனது பெயரில் பதிவு செய்ய சென்னைக்கு வந்திருந்தேன்.
பதிவு செய்த கையோடு கலைஞர் அவர்களை நேரில் பார்த்து நன்றி சொல்ல விரும்பினன். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திரு. சண்முகநாதன் மூலம் அனுமதி பெற்று கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றேன். சந்திப்பிற்கான காரணம் எதுவும் சொல்லவில்லை.
மாடியில் இருந்த கலைஞர் அவர்களை சந்தித்துப் பேசினேன்.. "நீங்கள் முதல்வராக இருந்தபோது 1998 இல் எனக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனையை இன்று காலை தான் முறைப்படி பதிவு செய்தேன்" என்று தெரிவித்தேன்.
" உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வந்தேன்" என்றேன்.
கலைஞர், ஒரு புன்னகையுடன் அருகில் இருந்த திரு. சண்முகநாதனிடம் கேட்டார் " அப்படியா..அப்படி எது‌வும்‌ ஒதுக்கீடு செய்தோமா!" என்று ஆச்சரியப்படுவது போல கேட்டார்.
சண்முக நாதன் "ஆமாம்" என்றார்.
கலைஞர் " எனக்கு அது ஞாபகத்தில் இல்லை" என்றார். சில‌ நொடிகள் மவுனத்திற்கு பிறகு " எனக்கு ஞாபகம் இல்லை.‌ ஆனால் நீங்கள் அதை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் என்பது 
மகிழ்ச்சியான விஷயம்" 
அத்துடன் " அதை நான் ஞாபகத்தில் வைக்கக்கூடாது.‌ நீங்கள் மறக்கவும் கூடாது. அது தான் சரி" என்றார் சிரித்தபடி.
"நான் தமிழ் மாணவன்" 
"திருக்குறள் படித்தவன்" என்றேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை
புன்னகையோடு "எல்லோரும் தான் தமிழ் படித்திருக்கிறார்கள்" என்றார். எதை நினைத்து சொன்னார் என்பது எனக்கு தெளிவாக புரியவில்லை. ஆனால் அந்த உரையாடல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
பிறகு எனது பணி‌ பற்றியும் ஒடிசா பற்றியும் விசாரித்தார். எங்கள் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையான பிஜூ பட்நாயக் பற்றியும் நினைவு கூர்ந்தார்.
நான் விடைபெற்று திரும்பினேன்.
அவரை‌ நேரில் சந்தித்து நன்றி கூறி‌ வாழ்த்து பெற்றது நிறைவாக இருந்தது.
அதற்கு அடுத்து 2008 இல் அவரை‌ச் சந்தித்தபோதுதான் எனது சிந்துவெளி ஆராய்ச்சி பற்றி‌ அவரிடம் விளக்கமாகக் கூறினேன்.
அது ஓர் இனிமையான நாள்.
-Balakrishnan R

;